யாழ். வல்லிபுர ஆழ்வார் கோயில் நோக்கி தொடரும் பாதயாத்திரை:

பிரசித்தி பெற்ற யாழ்.வடமராட்சி ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் ஆலயத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபை யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிகளின் ஆலோசனைக்கமைய நடைபெறும் புனித திருத்தலப் பாதயாத்திரை இன்று வெள்ளிக்கிழமை(11) காலை-08.30 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகியது.

இலங்கை மணித்திருநாட்டில் நிரந்தர சாந்தி சமாதானம் இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி மேற்படி பாதயாத்திரை முன்னெடுக்கப்படுகிறது.

இந்தப் பாதயாத்திரையை யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் நிலையத்தின் தலைவர் சிதாகாசானந்தா சுவாமிகள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

சிவலிங்கம் தாங்கிய ஊர்தியின் முன்னே சிவனடியார்கள் நடைபயணமாக இறைவன் புகழ்பாடியவாறு குறித்த பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர். பாதயாத்திரையில் கலந்து கொண்ட சில அடியவர்கள் பக்தி மேலீட்டால் ஆடியும் பாடியும் கலந்து கொண்டமை பார்ப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

அத்துடன் முதுமையையும் பொருட்படுத்தாது மூத்தோர்கள் சிலரும் பாதயாத்திரையில் உற்சாகமாக கலந்து கொண்டுள்ளனர்.

பாதயாத்திரையில் கலந்து கொள்ளும் சிவனடியார்கள் வீதியோரமாகவுள்ள ஆலயங்களைத் தரிசித்தவாறு பாதயாத்திரையைத் தொடர்ந்து வருகின்றனர்.

இன்று மதியம் நீர்வேலிக் கந்தசுவாமி ஆலயத்தில் பாதயாத்திரையில் கலந்து கொண்ட அடியவர்கள் அனைவருக்கும் அன்னதானம் பரிமாறப்பட்டது.

பாதயாத்திரை தற்போது இரவிரவாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழாவான நாளை சனிக்கிழமை(12) காலை குறித்த பாதயாத்திரைக் குழுவினர் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தைச் சென்றதடைவர்.