• Mi. Jul 28th, 2021

கனடா டொரோண்டோ திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் 2019ஆம் ஆண்டின் வருடாந்த மகோற்ஸவ பெருவிழா

Vontheva

Aug 10, 2019

கனடா டொரோண்டோ திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் 2019ஆம் ஆண்டின் வருடாந்த மகோற்ஸவ பெருவிழா இன்று (August 9, 2019) கொடியேற்றத்துடன் ஆரம்பம்.

புதிய அமைவிடத்தில் அண்மையில் மண்டலாபிஷேக பூர்த்திவிழாவை கொண்டாடி கனடாவில் வரலாற்று சாதனை நிகழ்த்திய அதே அந்தண குழுவினர் ஒற்றுமையாக இணைந்து கொடியேற்ற விழாவினை மிகவும் சிறப்பாக மண்டபம் நிறைந்த பக்தர்கள் சூழ்ந்திருக்க நடாத்தி மீண்டும் வரலாற்று சாதனை.

கொடியேற்றவிழாவினை கனடாவின் பிரபல தொழில் அதிபர் உதயகுமார் (Dynevor Express. Uthayakumar Alagaratnam, CEO & President) பொறுப்பேற்று நடாத்தி ஆலயத்தின் சிறப்பான விழாவின் நாயகராக பலத்த பாராட்டுதல்களை பெற்று கௌரவிக்கப்பட்டார்கள்.

தொழில் அதிபர் உதயகுமார் அவர்கள் ஆலயத்தின் நிர்மாணப்பணி, ஆலயத்தின் நிலம் கட்டிடம் சம்பந்தமான கொள்வனவு மற்றும் ஆலயத்தினை உருவாக்குகின்ற நிதிப்பங்களிப்பில் கூடுதலான தொகையினை வழங்கி ஆலயத்தின் வளர்ச்சியில் தங்களை தொடர்ச்சியாக முதன்மைப்படுத்திவருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

ஆலயத்தின் தலைவர் வைத்தியகலாநிதி சத்தியபாலன், பொருளாளர் மாத்மன் மற்றும் செயலாளர் வேல்நாதன் உட்பட ஏராளமான உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பெருவாரியாக நிகழ்வில் பங்குபற்றி விழாவின் வெற்றிக்கு உந்துசக்தியாக இருந்தார்கள்.

 

பழனி முருகன் கோவில் (பழநி முருகன் கோவில்) முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தின் பிரதம குருக்களாக இருந்துவரும் பழனிக்குருக்கள் இம்முறை வருடாந்த மகோற்ஸவ குருக்களாக பொறுப்பேற்று கொடியேற்ற விழாவினை மிகவும் சிறப்பாக நடைபெற வழிவகைசெய்தார்கள்.

ஏராளமான நாதஸ்வர தவில் வித்துவான்கள் பங்குபற்றி சிறப்பான முறையில் சற்றும் களைக்காமல் இசை வழங்கி பக்தர்களுக்கு இறைபக்தி கலந்த சந்தோசத்தினை உண்டாக்கினார்கள். குறிப்பாக நாதஸ்வர இமயம் எம் பி பாலகிருஷ்ணன், சிவமயம், சபாநாதன், சிவகுருநாதன், ஜெயகாந்தன் மற்றும் சதீஸ் ஆகியோர் சிறப்பான இசை வழங்கினார்கள்.

தமிழகத்தில் இருந்து தற்போழுது கனடாவில் கால் பதித்து இருக்கும் பிரபல பாடகி குறிப்பாக zee தமிழ் சரிகமப நிகழ்வில் வெற்றிவாகை சூடிய ஸ்ரீநிதி ஆலயத்தின் நிர்வாகத்தின் அழைப்பில் வருகைதந்து மிகவும் சிறப்பாக பல பாடல்களை வழங்கி பக்தர்களின் பலத்த பாராட்டுதல்களை பெற்றுக்கொண்டார்கள்.

அனலை எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிபர் விமல் அவர்கள் இன்று ஆலயத்திட்கு ஓர் அழகிய முஸீக வாகனத்தினை நன்கொடையாக வழங்கினார்கள். அந்த அழகிய முஸீக வாகனத்தில் எல்லாம்வல்ல விநாயகப்பெருமானும் மற்றும் அழகிய மயில் வாகனத்தில் எல்லாம் வல்ல முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்வீதி மற்றும் வெளிவீதி சுற்றிவருகின்ற காட்சி மிகவும் சிறப்பாக இருந்ததாக பல பக்தர்கள் தமிழ் பிசியிடம் தெரிவித்தனர்.

ஆலயம் என்ற சொல்லுக்கு ‘எல்லாம் ஒடுங்குமிடம்’ என்பது பொருளாகும். ‘ஆ’ என்பது பசுவையும், ‘லயம்’ என்பது ஒடுக்கத்தையும் குறிக்கும். இங்கு ‘பசு’ என்பது ‘ஆன்மா’ அது தனது மும்மலங்களையும் நீக்கிவிட்டு ‘பதி’யாகிய பகவானிடம் ஒடுங்குவதற்கான அடையாளமே ஆலயங்களாகும். மனித உடலை ஆலயமாகக் கொண்டால் அதனுள்ளே இருக்கும் ஜீவாத்மாவானது பரமாத்மாவின் அம்சமே எனினும் அது ‘பாசம்’ எனப்படும் தளையை விட்டு நீங்கினால்தான் பரமாத்மாவிடம் சென்று மீண்டும் ஐக்கியமாக முடியும். ஆலயம் பரமாத்மாவின் இருப்பிடம் மட்டுமல்ல, இலட்சக்கணக்கான ஜீவாத்மாக்கள் அங்கு வந்து இறைவனை வணங்கி முக்திக்கு வழிகோலும் இடமும் ஆகும். ‘பதி’, ‘பசு’, ‘பாசம்’ ஆலயம்! ஆலயத்தில் உள்ள மூல விக்ரஹம் ‘பதி’ எனவும், நந்திதேவர் ‘பசு’ எனவும் பலிபீடம் ‘பாசம்’ எனவும் குறிப்பிடப்படும்.

துவஜஸ்தம்பம் (கொடிமரம்) ‘காரணலிங்கம்’ எனவும், விமானம் ‘ஸ்தூல லிங்கம்’ எனவும், பலிபீடம் ‘அதிசூக்ஷ்மலிங்கம்’ எனவும் அறியப்படுகின்றன. துவஜஸ்தம்பத்தை ‘பதி’ என வைத்துக் கொண்டால் அதிலிருந்து மேலேபோகும் கொடிக்கயிறு ‘திருவருள் சக்தி’யையும் தர்ப்பைச் சுருள் ‘பாசத்தை’யும் கொடியில் வரையப்படும் ரிஷபம் ‘பசு’வையும் குறிக்கின்றன.
ஆலய உத்ஸவகாலங்களில் துவஜஸ்தம்பம் முக்கியத்துவம் பெறுகிறது. அதில் கொடியேற்றாமல் (துவஜாரோகணம்) எந்தவொரு உத்ஸவத்தையும் தொடங்கக் கூடாது என ஆகமங்கள் நிர்ணயித்துள்ளன. உத்ஸவத்தின் முதல் நாளன்று கொடியேற்றம் (துவஜாரோகணம்) நடக்கும். அதன் மூலம் மக்களுக்குள்ள குறைபாடுகள் நீங்கி நல்லவை விருத்தியடையும்.

அத்துடன் துவஜஸ்தம்பத்தின் உச்சியில் கொடி பறப்பதைப் பார்க்கும் மக்கள் ஆலயத்தில் உத்ஸவம் தொடங்கிவிட்டது என்பதைத் தெரிந்து கொள்வார்கள். கொடியேறியவுடன் பலிபீடத்திற்கு அருகே மேளத்தை (தவில் வாத்யத்தை) வைத்து அதற்குப் பூஜை செய்ய வேண்டும். மேளத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், சப்தமாதாக்கள், சூரியன், சந்திரன் ஆகியோர் இருப்பதாக ஐதீகம். மேள பூஜை முடிந்ததும் அதைத் தவில் வாசிப்பவர் வாசித்தவுடன் அப்பகுதியில் இருக்கக் கூடிய ராட்சஸர்கள், துர்த்தேவதைகள், பைசாசங்கள் ஆகியவை பயந்து ஓடிவிடும்.
கொடியேற்றும்போது ஸ்லோகம் சொல்லி முப்பத்து முக்கோடி தேவர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள் ஆகியோரை அங்கு வரவழைக்க வேண்டும். அவர்களும் மகிழ்ந்து அந்த வைபவத்தில் கலந்து கொள்வார்கள். கொடியேற்றும்போது அதைத் தரிசனம் செய்பவர்களுக்கு, அங்கு வரும் எல்லாத் தேவர்களின் அருளாசி கிடைப்பதால் பக்தகோடிகள் நினைத்த காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாகவே நடைபெறும்.

கொடியேற்றியபின் அந்த ஆலயத்தின் பிரதம அர்ச்சகர், உத்ஸவத்தைப் பொறுப்பேற்று நடத்த சங்கல்பம் செய்து கொண்டு கையில் காப்புக்கட்டிக்கொள்ள வேண்டும். உத்ஸவம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மறுநாளில்தான் அந்தக் காப்பைக் கழற்ற வேண்டும்.
முதல் நாளிலிலிருந்து கடைசிநாள்வரை, தினமும் காலையில் அஸ்திரதேவரை ஒரு சிறு பல்லக்கில் வைத்து, ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களிலும் உலாவரச் செய்ய வேண்டும். அப்போது எட்டுத் திக்கிலும் உள்ள திக்பாலர்களையும் அவரவர்களுக்குள்ள மந்திரங்களாலும், நிருத்தங்களாலும் ராகங்களினாலும், தாளங்களினாலும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அதனால் அந்த ஊரில் விஷஜுரம், அம்மைநோய், வாந்திபேதி போன்ற வியாதிகள் பரவாமல் மக்கள் காப்பாற்றப்படுவார்கள். துர்த்தேவதைகளால் ஆலய உத்ஸவத்திற்கு எந்தவொரு இடையூறும் இல்லாமல் திக்பாலர்கள் அருள் புரிவார்கள். 17-08-2019 அன்று தேர் திருவிழா இனிதே நடைபெற உள்ளதால் ஏராளமான முருக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. சமூக சேவா திலகம் கணனியுக கண்ணன் என எல்லோராலும் அழைக்கப்படும் இலங்கேஸ் அவர்களுடன் மேலும் பலர் கலந்துகொண்டு விழாவின் வெற்றிக்கு உந்துசக்தியாக இருந்தார்கள். இலங்கேஸ் அவர்களின் ஆன்மீக சேவையினை நிர்வாகம் பாராட்டி பொன்னாடை போர்த்தி சிறப்பான கௌரவம் செய்தார்கள்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.