கதிர்காமக் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(03) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

தொடர்ச்சியாக 14 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்- 12 ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளது. இந்தமாதம்- 17 ஆம் திகதி மாணிக்க கங்கையில் தீர்த்தோற்சவத்துடன் திருவிழா இனிதே நிறைவடையவுள்ளது.

இதேவேளை, கதிர்காமம் செல்லும் பக்தர்களின் நன்மை கருதி கடந்த-27 ஆம் திகதி யால குமண சரணாலய காட்டுப் பாதை சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது. கிழக்கின் பிரசித்திபெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் மேற்படி காட்டுப் பாதையூடாகவே பயணிக்கின்றனர்.

இதேவேளை, கதிர்காமம் மஹோற்சவத்தை முன்னிட்டு இம்முறை அதிகளவிலான பக்தர்கள் காட்டுப் பாதையூடாக யாத்திரை மேற்கொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

{செய்தித் தொகுப்பு:- செ. ரவிசாந்}