மணப்பெண்ணின் மனசில் இருந்து தாய்க்கு !கவிதை கவிமகன்.இ

 

வினாக்களால் பின்னப்பட்ட
வாழ்க்கை பாதையில்
விடை தேடி ஓடும் நான்
என் விழிகள் தாங்கிடும்
கனவுகளை எல்லாம்
ஆழ கிளறப்பட்ட
மனக்கிடங்கில்
புதைத்து விடுகிறேன்
நீ சந்தோசிக்க வேண்டும்
என்பதற்காக…

உன் ஆசைகளை என்
முதுகில் சுமக்க
தயாராகிவிட்டேன்.
அப்போதாவது
நீ ஆசையாய் என்னை
கருவில் சுமந்த வேதனை
தீர்ந்திடும் தாயே…

நீ சுட்டும் இடத்தை
நான் சுவீகரிக்கும்
சுதந்திரத்தை
எப்போதோ உனக்காக
விட்டுக் கொடுத்துவிட்டேன்
நீ சுதந்திரமாய் என்னை
ஆளுகை செய்வதற்காக
என்னுள்ளே
செத்துவிட்ட ஆசைகளுக்கு
பூமாலை இட்டுக் கொள்கிறேன்

என்னுள் பல்லாயிரம்
வளைவுகளும் திருப்பங்களும்
அத்தனைக்கும்
கைகாட்டி நீ தான்.
உன் விரல்
சுட்டுகையோடுதான்
இதுவரை நான்
நடந்திருக்கிறேன்
இனியும் உன் சுட்டுகை
அற்று இலக்குகள்
அடையாளப்படுத்த முடியாதவை
என்பதை நீ அறிந்தே
வைத்திருக்கிறாய்

என் அடையாளத்தை
ஆக்கிரமிக்கும் அதிகாரத்தை
நீயே வைத்துக்கொள்
நான் தட்டிப்பறிக்க மாட்டேன்
கானல் நீரான காலங்களை
நான் கடந்து வந்த போது
உன் சிறகுக்குள் தான்
காக்கப்பட்டேன்.

இப்போதும் உன் சிறகுக்குள்
விடுபடக்கூடாதென்ற
உன் விருப்பத்துக்காய்
உனக்குள்ளே முடங்கி போகுறேன்
உனக்காக என் சிறகுகளை
கொய்துவிட்டு
பறக்க முடியாத பறவையாய்
நான் உனக்குள்ளே
புதைந்து போகிறேன்.

ஆனாலும் தாயே…
„எனக்காக“ என்ற
ஒற்றை சொல்லில்
ஆளரவமற்ற
ஆடம்பரத்துக்குள்
என்னைத் தொலைத்துவிடாதே
அதிக ஆசைகளை
தொலைத்தவள் நான்
பசுமைகளை விட
பாலைவனங்களை கடந்து
வந்தவள் நான்
„உனக்காக“ என்ற
மற்ற சொல்லில்
என்னை தொலைக்க
நான் தயங்க மாட்டேன்.

பசுங்காற்று வீசும்
நிலவொளி ஒன்றில்
பழமைகளற்ற புதுமையோடு
நீ புன்னகைக்க வேண்டும்
என்றே நான் விரும்புகிறேன்
ஆனால்…
நீயோ உன் புன்னகை
கரிய இருளின் காற்றோடு
கலக்க வேண்டும் என்கிறாய்…
நான் உன் புன்னகைக்காக
அந்த கரிய இருளுக்குள்ளும்
வெளிச்சமிட்டபடி
நடப்பேன் தாயே…
ஏனெனில் அதையும்
நீயே கற்றுத் தந்தாய்…

கவிமகன்.இ