கூவிடும் குயில் !கவிதை சுதர்சன்

 

காவியங்களும் உரைக்கப்படுகிறது
வரலாறுகளும் எழுதப்படுகிறது
அவை நாளைய இருப்பிற்காக
கந்தல் சேலைகளும்
கலைந்த கூந்தல்களும்
கண்ணில் படுவதில்லை
இலக்கியங்களை அலங்கரிக்க

கீச்சிடும் குருவிகளையும்
கூவிடும் குயில்களையும்
வர்ணிக்கும் மனங்கள்
வெற்று மார்முலைகளை கவ்வி
பசிக்காக அழும்
குழந்தைகளின் வரண்ட
குரல்களை நேசிப்பதில்லை

வாசனைத் திரவியம் பூசிய
பெண்ணையும்
நவீன புதுமை பெண்களையும்
தத்தெடுக்கும் பேனாக்கள்
கிழிந்த ஆடைகளையும்
ஒரு வேளை சோற்றுக்காய்
உழைக்கும் வியர்வை வாசனைகளை தத்தெடுப்பதில்லை

பெண் விடுதலை வேண்டி
முக்காரமிடும் காளைகள்
தங்கள் வீட்டு பெண்களுக்கு விடுதலை
தராமல் வீதிக்கு வருகின்றன
சமூகத்தின் விடுதலை தேடி

மரணித்த மானுடம்
நடைப்பிணங்களாய்
அலைகிறது
நஞ்சு எனும் எண்ணை ஊற்றி
நலிந்த திரிகளை பற்ற வைக்க
களங்கமற்ற நெருப்பும்
வெக்கப்பட்டு அழுகிறது
அத்தனை கொடூரங்களையும்
அதனுள் எரிக்கும் போது

ஆக்கம்  சுதர்சன்